இடுக்கி, நெடுங்கண்டன் பகுதியில் சிட் ஃபண்டு நடத்தி வந்தவர் ராஜ்குமார். இவர் மூன்று கோடி அளவில் முறைகேடு செய்ததாக, இவரிடம் பணம் முதலீடு செய்தவர்கள் நெடுங்கண்டன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக ராஜ்குமார், சந்தியா ஆகிய இருவரைக் கைது செய்த காவல் துறையினர், காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். கைதான மூன்றாம் நாள், ராஜ்குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் அவரை பார்க்கச் சென்ற உறவினர்களுக்கு, ராஜ்குமார் பிணமாகக் கிடந்த காட்சி பேரதிர்ச்சியை அளித்திருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளிவர, காவல் நிலைய உயர் அலுவலர்கள், காவலர்கள் என எட்டு பேரை இடைநீக்கமும், ஐந்து பேரை பணியிட மாற்றமும் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்த குற்றப்பிரிவு காவல்துறையினர், நெடுங்கண்டன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சாபுவையும், உரிமையியல் காவலர் சாஜியையும் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது, ராஜ்குமார் கைது செய்த அன்று, அவர் மீது எந்த குற்றப்பத்திரிக்கையும் பதிவு செய்யாமல், இரண்டு நாட்கள் அடித்து, கொடுமைப் படுத்தியுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் படி, இரு காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்: 'ஆறு மாதத்தில் இரண்டு லாக்கப் மரணங்கள்' - ஹென்றி டிபேன் குற்றச்சாட்டு