பெருந்துறை அருகே வேப்பம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் முனியப்பன் (28), இவர் கர்நாடக மாநிலம், ஷிமோகா நகரைச் சேர்ந்தவர். இதே ஊரைச் சேர்ந்த நிவேதா(19) என்பவரைக் கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு திண்டல் அருகே வேப்பம் பாளையத்தில் குடியிருந்து வந்துள்ளனர். முனியப்பன் லாரிகளுக்கு கேஸ் உருளை ஏற்றும் ஊழியராகவும், இவரது மனைவி கடையிலும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு முனியப்பன் வழக்கம்போல வேலைக்குச் சென்று விட்டு, இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் நிவேதா வேறொரு வாலிபரோடு உறவில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து நிவேதாவிற்கும், முனியப்பனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது முனியப்பன் நிவேதாவை அவரது தாயார் வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று கோபத்தின் உச்சத்திலிருந்த முனியப்பன் நிவேதிதாவைக் கீழே தள்ளி கழுத்தைத் துண்டாக அறுத்துள்ளார்.
பின்னர் தலையைத் தனியே எடுத்து இருசக்கர வாகனத்தின் முன்புறம் பையில் வைத்து விட்டு, உடலை பெட்ரோல் டேங்கின் மீது வைத்து அருகே உள்ள வாய்க்காலில் வீசுவதற்காகக் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் நிலைதடுமாறி அவ்வழியிலிருந்த வீட்டுச் சுவரின் மீது மோதி விழுந்துள்ளார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் இதைக் கவனிக்க, உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
பெருந்துறை காவல் ஆய்வாளர் சுகவனம் தலைமையிலான காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று முனியப்பனை கைது செய்தனர். மேலும் நிவேதாவின் சடலத்தை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.