சென்னை புழல் அருகே உள்ள புத்தகரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (30). அப்பகுதியில் கோழிக்கறிக் கடை நடத்திவந்த இவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிரியா (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதியினருக்கு லோகேஷ் (4) என்கிற ஆண் குழந்தை உள்ளது. அனுப்பிரியா, சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் மருந்துக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.
இதற்கிடையே சுரேஷ் அவருடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பின்னர் இது குறித்து அனுப்பிரியா புழல் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின், அக்கம்பக்கதினரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அனுப்பிரியா தனது உறவினர் முரசொலி மாறனுடன் சேர்ந்து சுரேஷை கொலை செய்திருப்பாரோ என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழுந்தது. இதையடுத்து அனுப்பிரியா, முரசொலி மாறன் ஆகிய இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
விசாரணைக்கு பின்னரே சுரேஷ் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? அனுப்பிரியா சுரேஷை கொலை செய்து நாடகமாடினாரா? என்பது குறித்த விவரங்கள் தெரியவரும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போலீஸ் என்று கூறி முதியவரிடம் நூதன முறையில் கொள்ளையடித்த நபர் கைது!