சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத் துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத் துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது, ஹாங்காங்கிலிருந்து தாய்லாந்து வழியாக விமானம் வந்தது. இதில், சென்னையைச் சேர்ந்த அப்பாஸ் அலி சையத் இப்ராகிம் (43), முகமது ரிபாய் (41) ஆகிய இருவர் மீது அலுவர்கள் சந்தேகமடைந்தனர். பின்னர் அவர்களைப் பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர்.
![விமானநிலையம் இ-சிகரெட்டுகள்,தங்கம் பறிமுதல் சென்னை E-cigarettes, Gold recovery chennai international Airport](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4523171_chennai-1-2-horz.jpg)
அதில் மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட 89 இ-சிகரெட்கள், விலையுர்ந்த மூன்று ஐபேடுகள், 28 செல்ஃபோன்கள் ஆகியவை கடத்திவந்ததை கண்டுபிடித்தனர். மேலும், அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகளையும் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
அவற்றில் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 164 கிராம் தங்கம், 21 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஐபேடு, செல்ஃபோன்கள், ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இருவரிடமும் சுங்கத் துறை அலுவர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.