திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பூந்தமல்லி பணிமனைக்கு உள்பட்ட பேருந்து ஒன்று வள்ளலார் நகர் - பூந்தமல்லி நோக்கி சென்றுகொண்டிருந்தது. இந்தப் பேருந்தை ஓட்டுநர் குமார் என்பவர் ஓட்டினார்.
இந்நிலையில், அரசுப் பேருந்து போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் அருகே சென்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் பேருந்தை உரசுவதுபோல் சென்றனர். இதனால் பேருந்து ஓட்டுநருக்கும் இரு சக்கர வாகனத்தில் வந்தவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது பேருந்தில் வந்த பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்து பேருந்தை இயக்குமாறு வலியுறுத்தினர். இதையடுத்து, பேருந்து காட்டுப்பாக்கம் அருகே சென்றபோது அடையாளம் தெரியாத நபர்கள் அரசுப் பேருந்தை வழிமறித்தனர். பின்னர் அரசுப் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து வேகமாகத் தப்பிச் சென்றுவிட்டனர்.
இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மீது கண்ணாடித் துகள்கள் விழுந்து சிறிய காயம் ஏற்ப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்துவிட்டு தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.