நாகப்பட்டினம் மாவட்டம் கிளியனூர் பகுதியைச் சேர்ந்தவர் சிற்றரசு மகள் காயத்திரி (26). இவர் மயிலாடுதுறையில் உள்ள தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணியாற்றிவருகிறார். நேற்றிரவு அவர் வேலை முடிந்து இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பும்போது கிளியனூர் அருகே கார் ஒன்றிலிருந்து இறங்கிய மூன்று பேர் இருசக்கர வாகனத்தை தள்ளிவிட்டு காயத்திரியை காரில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டபோது கார் வேகமாகச் சென்றுள்ளது.
இது குறித்து, பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, காவல் துறையினர் பெண் கடத்தப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்தும் ரோந்து சோதனை மேற்கொண்டும் தீவிரமாக விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில் இரவு 12.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் தன்னை கடத்திய நபர்கள் இறக்கிவிட்டுச் சென்றதாக காயத்ரி தொலைபேசியில் தொடர்புகொண்டு பெற்றோரிடம் சொல்லியுள்ளார்.
உடனே பெரம்பூர் காவல் துறையினர் காயத்திரியை அழைத்துவந்து விசாரணை செய்தபோது, தன்னை இருசக்கர வாகனத்திலிருந்து வலுக்கட்டாயமாக ஏற்றியதுடன் தோடு, கொலுசு, மோதிரத்தையும் பிடுங்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
காரிலிருந்த நால்வரில் மூவர் இந்தியில் மட்டுமே பேசியதாகவும் ஓட்டுநர் மட்டும் தமிழில் பேசியதாகவும் சொன்ன காயத்திரி, தன்னை எதுவும் செய்துவிடாதீர்கள்; தனக்குத் திருமணம் ஆகப்போகிறது என்று தான் கண்ணீர்விட்டு அழுதபோது, கங்களாஞ்சேரி என்ற இடத்தில் தன்னை அவர்கள் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி. வெள்ளத்துரை விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.