சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் கடந்த 2013-14ஆம் ஆண்டில் மருத்துவமனை முதல்வராக இருந்தவர் கார்த்திகேயன். அப்போது, மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள், மருந்து மாத்திரைகள், தனியார் மருந்து நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்டன.
அதில், சில அலுவலர்களுடன் கூட்டு சேர்ந்து, மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது குறித்து யாரும் புகாரளிக்காத நிலையில், முதல்வர் கார்த்திகேயன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை கண்காணிப்பாளர் சந்திரமௌலி தலைமையில், காவல்துறையினர் கடந்த ஒரு மாதமாக ஊழல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, கடந்த அக்.23ஆம் தேதி அரசு மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் கார்த்திகேயன் மற்றும் அவருடன் இருந்த சில நபர்கள் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், நிர்வாக அலுவலர் இளங்கோவன், குடோன் கண்காணிப்பாளர் தண்டபாணி, உதவி கண்காணிப்பாளர் அசோக்ராஜ், தனியார் மருந்து நிறுவன உரிமையாளர் மீனாட்சி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மீது மோசடி மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்தல், அரசை ஏமாற்றி குற்ற சதியில் ஈடுபடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தொடர் விசாரணை மேற்கொள்ளப்படும் என லஞ்ச ஒழிப்பு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பெண்களிடம் இழிவாக நடந்துகொண்டால் பாஜகவில் உயர் பதவியா?'