சென்னையில் முதன் முதலாக மாதவரம் உதவி ஆணையர் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்கி மோசடி செய்த கும்பல், அடுத்தடுத்து காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் சிலர் பெயரில் போலி சமூக வலைதள கணக்கு தொடங்க ஆரம்பித்தது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மத்திய குற்றப்பிரிவிடம் புகாரளித்தனர். அதனடிப்படையில் ஐ.பி. முகவரி, கைப்பேசி எண்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை வைத்து தேடிவந்தனர்.
இவ்வாறு விசாரணை நடந்துகொண்டிருந்த வேளையில், சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அலுவலர்களின் பெயரிலேயே போலி சமூக வலைதள கணக்கு உருவாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல் துக்றையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து சைபர் மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர். குறிப்பாக இந்த காவல் அலுவலர்கள் பெயரில் போலி சமூக வலைதளம் தொடங்கி, காவல் அலுவலர்களின் சமூக வலைதள பக்கத்திலுள்ள நண்பர்களை தனது போலி சமூக வலைதளப் பக்கத்திலும் சைபர் கும்பல் நட்பாக்கிக் கொள்கின்றனர்.
பின் அவர்களிடம் காவல் அலுவலர்கள் தனிப்பட்ட முறையில் பேசுவதுபோல பணம் கேட்டு மோசடி செய்வது தெரியவந்தது. இவ்வாறாக மோசடி செய்யும் கும்பலை சைபர் காவல் துறையினர் தேடிவந்த வேளையில், ராஜஸ்தானைச் சேர்ந்த குறிப்பிட்ட ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதேபோல தமிழ்நாடு முழுவதும் இதே பாணியில் மோசடி கும்பல் வசூல் வேட்டையில் ஈடுபட்டுவருவதும் தெரியவந்துள்ளது. ஆனால் இந்தக் கும்பல் குறித்து முழுத்தகவல் கிடைத்தும் தனிப்படை காவலர்கள் ராஜஸ்தான் சென்று மோசடி கும்பலை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தனிப்படைக் காவல் துறையினர் ராஜஸ்தான் போன்ற வடமாநிலங்களில் உள்ள குற்றவாளிகளைக் கைதுசெய்ய செல்லும்போது, பல சவால்களைச் சந்திக்கின்றனர். அங்கிருக்கும் காவல் துறையினர் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருப்பதாக, ஏற்கனவே விசாரணைக்கு சென்ற அலுவலர்கள் வேதனை தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் குற்றவாளிகளின் ஊர் மக்கள், கைதுசெய்ய சென்ற காவல் அலுவலர்களைச் சிறைப்பிடிப்பதும், கட்டப்பஞ்சாயத்து செய்வதும் நடந்தேறியுள்ளது.
இச்சூழலில் காவல் உயர் அலுவலர்கள், வட மாநில உயர் அலுவலர்களிடம் உதவி கேட்டாலும் முழுமையாக ஒத்துழைப்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தனிப்படை சென்றுவருவதற்கான செலவுகளும் அரசு முறையாகத் தராததால் வடமாநில குற்றவாளிகளைப் பிடிக்க காவல் துறையினர் தயங்குகின்றனர்.
இதனால் குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்தும் பிடிக்கமுடியாமல் சிக்கலில் தவிக்கின்றனர்.