பல்லாவரத்தையடுத்த திரிசூலம் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு சிலர் கஞ்சா விற்பனை செய்துவருவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டிருந்தது. இதனையடுத்து காவல் துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு கும்பல் ரகசியமாக கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது.
இதையடுத்து அவர்களை மடக்கிப்பிடித்து கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து கஞ்சா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், பல்லாவரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த கிஷோர், பழைய பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகர் (எ) நாகராஜ், விஜயன், அருள் ஆகியோர் என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 750 கிராம் எடையுள்ள 149 கஞ்சா பொட்டலங்கள், நான்கு விலையுயர்ந்த செல்ஃபோன்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல் துறையினர், பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மனைவியின் திருமணம் மீறிய உறவால் கணவர் தற்கொலை