தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வடக்குச் செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (19). இவர் வேம்பாரில் உள்ள உப்பளத்தில் வேலை-பார்த்துவருகிறார். அதே ஊரைச் சேர்ந்த இவரது நண்பர்கள் ராமலிங்கம் (21), அழகுராஜா (19), கன்னிராஜபுரம் ராமச்சந்திரன் (22) ஆகிய மூவரும் சென்னையில் உள்ள கடைகளில் வேலைபார்த்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் மூவரும் ஊருக்கு வந்து சுரேஷ்குமாருடன் பொழுதைப் போக்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், சுரேஷ்குமார் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் தூத்துக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியவரவே அவர்கள் மகளைக் கண்டித்துள்ளனர். இனி வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று கூறி தடைபோட்டு, அவரை வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தனர்.
இதனால் சுரேஷ்குமார் காதலியைப் பார்க்கமுடியாமல் தவித்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பரான ராமலிங்கம் காதலியைச் சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி அவரை விளாத்திகுளம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். காட்டுப்பகுதியில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அந்த இளம்பெண்ணை சுரேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க முயன்ற அப்பெண், ஓடிச்சென்றபோது மயங்கி கீழே விழுந்தார். காட்டுப்பகுதியில் இளைஞர்கள் ஓடிச்சென்றதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர் விளாத்திகுளம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதன்பின்னர் தப்பியோடிய சுரேஷ்குமார், உள்ளிட்ட நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி குமார சரவணன் உத்தரவிட்டுள்ளார்.