திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்டவை 24 மணி நேரமும் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாஹுல்ஹக் உத்தரவின்பேரில் நேற்று காலை காவல் துணை கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் தலைமையிலான காவல் துறையினர் திடீர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, மணப்பாறை நகர் பகுதியில் மூன்று இடங்களில் அரசு மதுபாட்டில்கள் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் விற்பனை நடைபெற்றுகொண்டிருந்ததை காவல் துறையினர் கையும்களவுமாகப் பிடித்தனர்.
அதில், ராஜா என்பவரிடம் 88 மதுபாட்டில்கள், வெள்ளைச்சாமி என்பவரிடம் 114 மதுபாட்டில்கள், விஜயகுமார் என்பவரிடம் 52 மதுபாட்டில்கள் என சுமார் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 267 மதுபாட்டில்களும் ஏழாயிரத்து 720 ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்து விற்பனை செய்த மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
அதனைத்தொடர்ந்து, பூங்கா சாலையில் மகாலெட்சுமி, நாகராஜ் என்பவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்தபோது அவர்கள் வைத்திருந்த 1600 கிராம் கஞ்சா, 10 ஆயிரத்து 880 ரூபாய் ரொக்கப் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.