சென்னை: சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி கவுதம் சிகாமணிக்குச் சொந்தமான 8.60 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், திமுக எம்பியுமான கவுதம் சிகாமணி 2008 - 2009, 2012 - 2013ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக அமெரிக்கா, ஜகதா, அரபு போன்ற நாடுகளில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் இல்லாமல் சொத்துக்களை வாங்கி முதலீடு செய்து வந்தது அமலாக்கத் துறையினருக்கு தெரியவந்தது.
அதன் அடிப்படையில் அமலாக்கத் துறையினர் அந்நிய செலாவணி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் கவுதம் சிகாமணி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. மேலும், சட்டவிரோதமாக வெளிநாடுகளில் முதலீடு செய்து 8.60 கோடி ரூபாய் அளவிற்கு சொத்துக்களை குவித்திருப்பதும் தெரியவந்தது.
இதனால் தமிழ்நாட்டில் கவுதம் சிகாமணிக்குச் சொந்தமான விவசாய நிலம், குடியிருப்பு, வங்கிக் கணக்குகள் என 8.60 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத் துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.