மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள அலிபூர்துர் மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் யானைகள் வசித்து வருகின்றன. அவ்வப்போது யானைகள் அருகிலுள்ள விவசாய நிலங்களுக்குள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், விவசாய நிலத்திற்கு வனவிலங்குகள் வந்துவிடக்கூடாது என்பதற்காக, நிலத்தின் உரிமையாளர் சட்ட விரோதமாக மின்கம்பி அமைத்துள்ளார்.
இதனையறிந்திடாத 40 வயதுடைய ஆண் யானை ஒன்று, நிலத்திற்குள் சென்றது. அப்போது அங்கு போடப்பட்டிருந்த மின்கம்பிகளில் சிக்கி, யானை உயிரிழந்தது.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத் துறை மற்றும் காவல் துறையினர் யானையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, சட்டவிரோதமாக நிலத்தில் மின்கம்பி அமைத்த நிலத்தின் உரிமையாளரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.