திருப்பத்தூர் : சென்னை வில்லிவாக்கம் மேட்டுத் தெரு லேன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). வழக்கறிஞரான இவர், மக்கள் ஆளும் அரசியல் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி நடத்தி வந்தார். இவரது மனைவி ரம்யா அந்த கட்சியின் நிறுவனராக செயல்படுகிறார். நேற்று முன்தினம்(அக்.4) இரவு 8.45 மணியளவில் வில்லிவாக்கம், மோகன் ரெட்டி மருத்துவமனை அருகில் ராஜேஷ் நடந்து வந்த போது அடையாளம் தெரியாத 7 பேர் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களைக் கண்டு சுதாரித்த ராஜேஷ் வேகமாக நடக்க, விரட்டிச் சென்ற மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற ஓடிவந்த திருமுருகன் (27) என்பவரையும் அக்கும்பல் கத்தியால் தாக்கி காயப்படுத்தினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் ராஜேஷ் உயிரிழந்தார். இது தொடர்பாக அண்ணாநகர் துணைக் ஆணையாளர் ஜவகர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொலையாளிகள் யார் என்று போலீசார் விசாரணையை தொடங்கினர். கொலை செய்யப்பட்ட ராஜேஷ் பிரபல ரவுடி சோமுவின் நெருங்கிய உறவினர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காமிரா காட்சிகளை வைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், வழக்கறிஞர் ராஜேஷ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த முருகேசன், அருண், ருக்கேஷ்வரன், சஞ்சய், கும்பகோணம் பகுதியை சேர்ந்த ரமேஷ், ஸ்ரீநாத் ,திருநெல்வேலி பகுதியை சேர்ந்த வைரமணி, திருவள்ளூர் பகுதியை சேர்ந்த கிஷோர்குமார் உள்ளிட்ட 8 பேர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி காளிமுத்து வேல் முன் சரணடைந்தனர். 8 பேர் தரப்பில் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி ஆஜரானர். 8 பேரிடம் தனித்தனியாக விசாரணை நடத்திய நீதிபதி, அவர்கள் 8 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிற 9 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். சரணடைந்தவர்கள் வாணியம்பாடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க : திருப்பத்தூரில் அதிகரித்துவரும் கோவிட்-19 பாதிப்பு!