மீனம்பாக்கம், திரிசூலம் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லாவரம் காவல் நிலையத்திற்குத் தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.
அதேபோல், கஞ்சா வழக்கில் முன்பு கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரையும் வரவழைத்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் யாரும் கஞ்சா விற்பனையில் தற்போது ஈடுபடவில்லை என்பது தெரிந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவரைப் பிடிப்பது காவலர்களுக்கு பெரும் சவாலானது.
இந்த நிலையில், பல்லாவரம் ரேடியல் சாலையில் ஒரு முள்புதரில் கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த இருவரைப் பிடித்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், திரிசூலம் சாமி நகர் என்ற பகுதியில் ஐயப்பன் என்பவருக்கு ஃபோன் செய்தால் போதும், உடனே எடுத்துக் கொண்டு வந்துவிடுவார் என்று தெரிவித்துள்ளனர். அதன்படி, மாறு வேடமணிந்து அங்கு சென்ற காவல் துறையினர், பிடிபட்ட இருவர் மூலம் ஃபோன் செய்து அய்யப்பனிடம் கஞ்சா கொண்டு வரும்படி கூறினர்.
இதையடுத்து, கஞ்சாவுடன் சைக்கிளில் அங்கு வந்த அய்யப்பனை காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். பிறகு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், அய்யப்பன் பிளம்பிங் வேலை செய்து வந்ததும், ஊரடங்கால் வேலையிழந்து வருமானம் இல்லாததால் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், அய்யப்பன் வீட்டில் பதுக்கிவைத்திருந்த ஒரு கிலோ கஞ்சா, ஒரு வீச்சரிவாளையும் காவலர்கள் பறிமுதல்செய்தனர். அவரிடம் அப்பகுதியில் நடந்த செயின் பறிப்பு, வழிப்பறி நிகழ்வுகள் குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆட்டோவில் கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது!