சென்னை கிண்டியை அடுத்த போரூர் அண்ணாநகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மதுரை(48). இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ளதால் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபான கடை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்கவில்லை. இதனால் தாம்பரம் அடுத்த வண்டலூரில் மதுபான கடையில் மது வாங்குவதற்காக மதுரை இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார்.
இதையடுத்து மதுரை, அங்கயே மது அருந்திவிட்டு, மது பாட்டில்களையும் வாங்கிக் கொண்டு அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் போரூர் சென்றுள்ளார். அப்போது பெருங்களத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் காவலர்கள் யாரும் சோதனை செய்யாமல் வாகனங்களை அனுப்பியுள்ளனர்.
இதன் விளைவாக அதிக மது போதையில் சென்ற அந்நபர், மதுரவாயல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் பொழுது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .இதைக்கண்ட வாகன ஓட்டிகள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், அவரை பரிசோதித்ததில் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து தாம்பரம் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தாம்பரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.