சென்னை: செளகார்பேட்டையில் நவம்பர் 11ஆம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் மற்றும் அவரது நண்பர்களான ரபீந்திரநாத் கர், விஜய் உத்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரையும் விசாரணை செய்வதற்காக 10 நாட்கள் காவல்துறையினர் விசாரணைக் காவலில் நேற்று(நவ.18) எடுத்தனர்.
அந்த மூவரிடமும் தனித்தனியாக நேற்று(நவ.18) இரவு முதல் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் ஜெயமாலாவின் அண்ணன் கைலாஷ் தனது சகோதரிக்கு தலீல்சந்த், அவர்களது உறவினர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாகவும், இதை சீத்தல் குமார் கண்டும் காணாமல் இருப்பதாக ஜெயமாலா தங்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுததாகவும், அதனால் இவர்களை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளில் தான் வைத்திருந்தது நாட்டுதுப்பாக்கி எனவும், தனது தம்பி விலாஸ் வைத்திருந்தது முன்னாள் விமானப்படை அலுவலரின் துப்பாக்கி எனவும் தெரிவித்துள்ளார்.
கைலாஷ் தம்பி விலாஸ் ஒரு வழக்கறிஞர் எனவும் அதன்மூலம் முன்னாள் விமானப்படை அலுவலர் ஒருவர் நட்பானதாகவும், அதனால் அந்த விமானப்படை அதிகாரியின் லைசென்ஸ் துப்பாக்கியை சில காலம் வைத்திருக்க வேண்டுமென விலாஸ் வாங்கி தன்னிடம் வைத்துக்கொண்டு அந்தத் துப்பாக்கியை கொலை செய்ய எடுத்து வந்ததாகவும் கைலாஷ் போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார்.
அதேபோல விலாஸுக்கு பழக்கமான ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் காரை சிலகாலம் பயன்படுத்திவிட்டு தருவதாக கூறி அந்த காரையும் இந்த கொலைச்சம்பவத்திற்கு விலாஸ் பயன்படுத்தியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. விலாஸ் வைத்திருந்த துப்பாக்கி, லைசென்ஸ் துப்பாக்கி என்பதால் முன்னாள் விமானப்படை அலுவலரின் விவரங்களை எடுத்து அவரிடம் விசாரிக்க காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் பத்ரிநாத் ஆலயத்தின் நடை மூடப்பட்டது!