கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பூவனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுகன்யா (23). இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் அந்தப் பகுதியில் உள்ள கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (25) என்பவருக்கும் பள்ளி பருவ காலத்தில் நட்பு ஏற்பட்டதாகவும், இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கடந்த ஐந்து நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். இந்த நிலையில் சுகன்யா கடத்தப்பட்டதாக அவரது பெற்றோர்கள் திருநாவலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரை விசாரித்த காவல்துறையினர் இருவரையும் நேற்று (ஜூன்-12) மாலை திருநாவலூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்த வேண்டுமென இளங்கோவனின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
ஆனால் இருவரையும் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுகன்யாவின் பெற்றோர்கள், உறவினர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கிளியூர் காலனிக்கு சென்றனர்.
அங்கு, ஏற்கனவே ஏராளமான காவலர்கள் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள், இளங்கோவன் வீடு பகுதிக்கு செல்ல சுகன்யாவின் உறவினர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இரவு 10 மணியளவில் அந்தப் பகுதியில் சுகன்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் திரண்டனர். அந்த நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், உளுந்தூர்பேட்டை காவல் துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமையில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர்.
அப்பொழுது சுகன்யாவின் உறவினர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுகன்யாவின் உறவினர்கள் காவலர்கள் மீது கல்வீசி தாக்குதல் தொடர்ந்தனர்.
இந்தத் தாக்குதலால் திருநாவலூர் காவல் ஆய்வாளர் விஜி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மூன்று காவலர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் காரணமாக பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை திருநாவலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே தொடர்ந்து இரு கிராமங்களிலும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிய பெண் காவலரைப் பாராட்டிய எஸ்.பி.