சென்னை: சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை, வறுமையின் காரணமாக வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாகக் கூறிய சிறுமியின் உறவு பெண், சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது காவல் துறையின் விசாரணையில் தெரியவந்தது.
சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில் விசாரணை நடத்திய வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் துறையினர், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய உறவினர் சகிதாபானு, அவரது திருமண உறவை மீறிய காதலன் மதன்குமார், இடைத்தரகர்கள் என 12 பேரை இதுவரை கைது செய்துள்ளனர்.
இடைத்தரகர்கள் மூலம் வண்ணராப்பேட்டையைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன், சிறுமியை தனது அலுவலகத்தில் வைத்து, அவரது நண்பரான எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளர் புகழேந்தியுடன் சேர்ந்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி அரசியல் கட்சி பிரமுகரும், காவல் ஆய்வாளரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சில அரசியல் பிரமுகர்கள், ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஒருவரும், மருத்துவர் ஒருவரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர்கள் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு, கிழக்கு கடற்கரை சாலையிலுள்ள சொகுசு விடுதிகள், ரிசார்ட்டுகள் என பல இடங்களுக்கு சிறுமி அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
இச்சூழலில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாவை காவல் துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரு பட்டியலில் முக்கிய நபர்கள் குறித்து ஐந்து தனிப்படை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் யாரெல்லாம் தொடர்பில் உள்ளனரோ, அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் தெரிவித்துள்ளதால், பட்டியலில் உள்ள நபர்கள் மீதான கைது நடவடிக்கை தொடர்ந்து நடைபெறவுள்ளது.