மலேசியாவைச் சேர்ந்த லெட்சுமணன் மற்றும் அவருடைய மகன் கபிலன் ஆகிய இருவரும் கடந்த 24ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து சைதாப்பேட்டை சென்றனர். அப்போது, தனியார் விடுதியின் வெளியே நின்றிருந்த இருவரையும் கத்தி முனையில் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாத மூவர், 10 சவரன் நகை, விலையுர்ந்த செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து கபிலனும் அவரது தந்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். லட்சுமணன் சிகிச்சைக்காக சென்னை வந்ததாக அவர்கள் காவல் துறையினரிடம் தெரிவித்திருந்த நிலையில், தந்தை மகன் இருவரும் கடத்தல் குருவிகள் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
குருவியாக இருவரும் செயல்பட்டு தங்க கட்டிகளை சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். அதற்கான கமிஷன் பிரிப்பதில், சென்னையில் உள்ள கூட்டாளிகளுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மற்ற மூன்று கடத்தல் குருவிகள், தந்தை மகனை மிரட்டி நகை, பணம், செல்போனை பறித்துச் சென்றது அம்பலமானது.
இதனையடுத்து குருவியாக செயல்பட்ட மலேசியாவைச் சேர்ந்த தந்தை-மகன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று கடத்தல் குருவிகளையும் பிடித்து சைதாப்பேட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...'பஜ்ஜி சரியில்லை' - என சொன்னவரைக் கத்தியால் வெட்டிய வடஇந்தியர்