சென்னையை அடுத்த தாம்பரம் கிருஷ்ணா நகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் முருகன். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணினி பொறியாளராகப் பணியாற்றிவருகிறார். பிரசவத்திற்காக கோவை சென்றிருக்கும் மனைவியை பார்க்க முருகனும் கடந்த வாரம் கோவைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்த அருகில் வசிப்போர், முருகனுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக, உடனடியாக தாம்பரம் காவல் நிலையத்தில் முருகன் புகார் அளித்துள்ளார். பின்னர் காவல் துறையினர் முருகன் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, அங்கு 60 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் கைரேகை நிபுணர்களைக் கொண்டும் தாம்பரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதேபோல், தாம்பரம் அருகேயுள்ள பீர்க்கன்கரணை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வீட்டிலும் 13 சவரன் நகை, இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையர்கள் களவாடிச் சென்றுள்ளனர்.
தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் மணிகண்டனும் அவரது மனைவியும் கடந்த 4ஆம் தேதி வெளியூர் சென்றனர். நேற்று இரவு வீடு திரும்பிய மணிகண்டன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், பீரோவின் லாக்கரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது குறித்து மணிகண்டன் பீர்க்கன்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பீர்க்கன்கரணை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
தாம்பரத்தை ஒட்டிய இருவேறு பகுதிகளில் கொள்ளை நிகழ்வு அரங்கேறியிருப்பது அம்மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: "ஒரு கிலோ நகையைக் கணக்கு காட்டாத போலீசார்" - லலிதா ஜூவல்லரி கொள்ளையன் பகீர் வாக்குமூலம்