திருவள்ளூர் மாவட்டம், மதுரவாயல், தனலட்சுமி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் உணவகத்துக்கு, நேற்றிரவு (டிச. 20) மோட்டார் சைக்கிளில் வந்த நபர் குடிபோதையில் உணவு சாப்பிட்டார். உணவு சாப்பிட்டு முடித்தவுடன் கடை ஊழியர்கள் பணம் கேட்டதற்கு, தான் காவல் உதவி ஆய்வாளர் என்றும் தன்னிடம் பணம் கேட்பதா என்றும் கூறி ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளார்.
மேலும் கடையின் விளம்பரப் பலகையை வெளியே வைக்கக்கூடாது, உள்ளேதான் வைக்க வேண்டும் என்றும் கூறி போதையில் அக்கடையின் போர்டை தூக்கி வைத்துள்ளார். தொடர்ந்து, நாளை முதல் விளம்பரப் பலகை வெளியே இருக்கக் கூடாது என்றும் அடுப்புகள் எல்லாம் உள்ளே இருக்க வேண்டும் எனவும் மிரட்டி விட்டுச் சென்றார். இந்தச் சம்பவத்தை அங்கிருந்த உணவக ஊழியர்கள் தங்களது செல்போனில் காணொலியாகப் பதிவு செய்துள்ளனர். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இந்நிலையில், குடிபோதையில் தகராறு செய்த காவல் உதவி ஆய்வாளர் அரிநாத் என்பதும், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் அவர் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இவர் ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் காவலர் குடியிருப்பில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது குறிப்பிடத்தக்கது.
குடிபோதையில் அங்குள்ள உணவகங்களுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டால் அவர்களை இவர் அடிக்கடி மிரட்டி விட்டுச் செல்வதாகவும் கடை உரிமையாளர்கள் தற்போது புகார் தெரிவித்துள்ளனர். மேலும், காவல் உதவி ஆய்வாளர் அரிநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க...டிச.23 முதல் மு.க.ஸ்டாலின் பரப்புரை!