பல்லாவரத்தை அடுத்த பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் பல நாட்களாக கஞ்சா விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, சங்கர் நகர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து கஞ்சாக் கும்பலை நோட்டமிட்டு வந்தனர். இந்நிலையில், அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்கப்படுவதாக சங்கர் நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் பேருந்து நிலையத்தில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த நான்கு பேரை சுற்றி வளைத்தனர். அதில் இருவர் காவலர்களை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடினர்.
மற்ற இருவரையும் மடக்கிப் பிடித்த காவலர்கள் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்ததில், அவர்கள் அனகாபுத்தூரைச் சேர்ந்த ராகேஷ் (21) மற்றும் கிச்சா என்கிற கிருஷ்ணகாந்த் (19) என தெரியவந்தது.
அவர்களிடமிருந்த ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ஆந்திராவில் இருந்து பேருந்து மூலம் கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சங்கர் நகர் காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா விற்று மாமூல் கொடு... மூதாட்டியை பயமுறுத்தும் காவல்துறையினர்!