சென்னை பாடிக்குப்பம் அருகே திருமங்கலம் சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் கணேசன் தலைமையிலான காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அகில உலக மனித உரிமைகள் ஆணைய தமிழ்நாடு துணை தலைவர் என ஸ்டிக்கர் ஓட்டி வந்த காரை பிடித்து காவல் துறையினர் சோதனை செய்தனர்.
அப்போது காரை ஓட்டி வந்த அண்ணாநகர் பாடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சவுந்தரராஜன் (43) என்பவர் காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்டதுடன் தான் அகில உலக மனித உரிமைகள் ஆணையத்தின் தமிழ்நாடு துணை தலைவர் என்றும் தன் காரை நிறுத்தி சோதனை செய்ய உங்களுக்கு எவ்வளவு தைரியம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை பறிமுதல் செய்து சவுந்தரராஜனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், சவுந்தரராஜன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதும், காரில் போலியாக மனித உரிமைகள் ஆணைய துணை தலைவர் என ஸ்டிக்கர் ஓட்டி கொண்டு வளம் வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கணேசன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரை கைது செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும், சவுந்தரராஜன் போலி மனித உரிமைகள் ஆணையம் பெயரில் எதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...தி.நகர் நகைக்கடையில் 4.5 கிலோ தங்கம் கொள்ளை- இருவரிடம் விசாரணை