சென்னை: வாடகைக்கு கார்களை எடுத்து, விற்று மோசடியில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை கோட்டூர்புரம், திருவள்ளுவர் நகர், 2ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ் சிங். கிண்டி பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரிடம் 3 கார்களை மாத வாடகைக்கு விட்டதாகவும், 2 மாதம் வாடகை கொடுத்தவர், அதன் பின்னர் வாடகை பணத்தையும் தராமலும், காரையும் திரும்பத் தராமலும் ஏமாற்றி தலைமறைவாகி விட்டதாக ஆகாஷ் சிங் கிண்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இது தொடர்பாக கிண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆகாஷ் சிங் ஓ.எல்.எக்ஸ் இணையதளத்தில் கார் வாடகைக்கு கொடுக்கப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்.
இதனைப் பார்த்து கிண்டி, தொழிற்பேட்டையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் ஆகாஷ் சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவரது ஹோண்டோ அமேஸ் காரை மாதம் ரூ.28 ஆயிரத்திற்கு வாடகைக்கு ஆகாஷ் சிங் கொடுத்துள்ளார்.
அருண்குமார் முதல் 2 மாதங்கள் காருக்கான, மாத வாடகையை சரியாகக் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நம்பிக்கையில், ஆகாஷ் சிங் தனது மற்றும் நண்பர் கார்த்திக் என்பவரின் இரண்டு ஹுண்டாய் ஐ20 கார்களை அருண்குமாரிடம் மாத வாடகைக்குக் கொடுத்துள்ளார்.
இதற்கும் சேர்த்து அடுத்த 2 மாதங்கள் வரை காருக்கான வாடகையை கொடுத்துள்ளார். இப்படி எல்லாம் சுமூகமாக நடந்துகொண்டிருக்க, தன் சுயருபத்தை வெளிகாட்ட தொடங்கியிருக்கிறார் அருண்குமார். ஆம், சில மாதங்களாக அருண்குமார் வாடகை பணத்தை கொடுக்காமல் போக்கு காட்டியுள்ளார்.
அதன் பின்னர் எந்த அறிவிப்பும் இன்றி தலைமறைவாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆகாஷ் சிங், கிண்டி தொழிற்பேட்டையில் வசித்துவரும் அருண் குமாரை பார்க்கச் சென்றார். அப்போது தான், தான் ஏமாற்றப்பட்டதை ஆகாஷ் உணர்ந்துள்ளார். தான் தங்கியிருந்த வீட்டை காலி செய்துவிட்டு, அருண் கார்களை கொண்டு தப்பிசென்றுள்ளார்.
இதுகுறித்து கிண்டி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அதில், தலைமறைவாகி பல்லாவரத்தில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து, ஆகாஷ் சிங்கின் 2 கார்கள், கார்த்திக்கின் கார் என 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கில் கைதான அருண்குமார், ஆகாஷ் சிங்கிடமிருந்து பெற்ற 3 கார்களையும் வேறொரு இடத்தில் விற்பனை செய்ததும், இதில் கார்த்திக்கின் காரை விபத்துக்குள்ளாக்கி சேதப்படுத்திய நிலையில் மறைத்து வைத்திருந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், அருண்குமார் 2016ஆம் ஆண்டு ஹுண்டாய் விற்பனை அங்காடியில் விற்பனையாளராக பணிபுரிந்தபோது, கார்களை வாங்க பதிவுசெய்து முன்பணம் கொடுத்திருந்த 28 வாடிக்கையாளர்களின் பணம் சுமார் ரூ.60 லட்சத்தை கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்டதாக நந்தம்பாக்கம் காவல் துறையினர் கைதுசெய்து சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. அதன் பின்னர், பிணையில் வெளியே வந்தவர், மீண்டும் மோசடியில் ஈடுப்பட்டது அம்பலமாகியுள்ளது.
தற்போது, மோசடியில் ஈடுபட்ட அருண்குமாரை கிண்டி காவல் துறையினர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னிறுத்திய பின்னர், நீதிமன்ற காவலில் சிறையிலடைத்தனர்.