புதுச்சேரி மாநிலம், திருநள்ளாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகவும், வேளாண்துறை அமைச்சராகவும் இருப்பவர் கமலக்கண்ணன். இவர், தினமும் மாலை கடற்கரை சாலையில் நடைப்பயிற்சி செய்வது வழக்கம். இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை முடித்துவிட்டு, நேற்று காலதாமதமாக வீடு திரும்பிய நிலையில், இரவு 10 மணிக்கு மேல் கடற்கரை சாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அமைச்சர் நடந்து வந்துகொண்டிருந்த போது, அவர் பின்னால் பைக்கில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள், திடீரென அவர் கையிலிருந்த செல்போனை பறித்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர். இதுகுறித்து தகவலறிந்ததும் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடந்தவை குறித்து அமைச்சர் கமலக்கண்ணனிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, இரண்டு நபர்கள் அமைச்சரின் செல்போனைப் பறித்துச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள மற்ற சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்யும் பணியில் தனிப்படை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
தப்பியோடிய நபர்களை கைது செய்ய காவல்துறையினர் பலக்குழுக்களாக பிரிந்து தீவிரமாக தேடி வருகின்றனர். அமைச்சரின் செல்போனையே பறித்துச் சென்ற நிகழ்வு புதுச்சேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெயிண்ட் அடிக்கும்போது தவறி விழுந்தவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு!