சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் இருந்து பல நாடுகளுக்கும் பொருட்கள் சுங்க அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்களும் இங்கு சோதனையிடப்பட்ட பிறகே, வெளியே அனுப்பப்படும். இந்நிலையில், ஆஸ்திரேலியாவிற்கு முறைகேடாக 32 பெட்டிகளில் பூக்கள் கடத்தப்பட இருப்பதாக, சிபிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து நேற்றிரவு விமான நிலைய சரக்குப்பிரிவில் நுழைந்த 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள், அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 500 கிலோ கடத்தல் பூக்களை அறை ஒன்றில் சீல் வைத்த அதிகாரிகள், பூக்கள் ஏற்றுமதிக்கு அனுமதியளித்த சுங்கத்துறை அதிகாரிகளின் பட்டியலையும் கைப்பற்றினர். கார்கோ பகுதியில் உள்ள ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான எலக்ட்ரானிக் ஆவணங்களையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஏராளமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு இறக்குமதி-ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் விலையை குறைவாக நிர்ணயித்து குறைவான வரி விதிப்பது, வரியே விதிக்காமல் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பது என சுங்கத்துறை அதிகாரிகள் பெரும் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக வந்த புகாரின் அடிப்படையிலும், சிபிஐ அதிகாரிகள் இச்சோதனையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
நேற்றிரவு தொடங்கி விடிய விடிய நடந்த சோதனையில், சுங்கத்துறையினர், சரக்கு ஏஜெண்டுகள் ஆகியோரின் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அங்கிருந்த சுங்கத்துறை அதிகாரிகளிடமும் கிடுக்கிப்பிடி விசாரணையை சிபிஐ நடத்தி சென்றுள்ளது. சம்பந்தப்பட்ட சுங்க அதிகாரிகளை சிபிஐ அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில் கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய தங்க கடத்தல் விவகாரத்தில், சுங்க அதிகாரிகள் சிக்கியது போல், சென்னை விமான நிலையத்திலும் தங்க கடத்தல் நடக்கிறதா என்ற கோணத்திலும் இச்சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கொள்ளை போன 250 சவரன் நகை தங்கக்கட்டிகளாக மீட்பு!