தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்ட நிலையில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேரைக் கைதுசெய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, சிபிஐ அலுவலர்கள் வியாபாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், காவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்று (செப்.22) சிபிஐ அலுவலர்கள், தடயவியல் வல்லுநர்கள் 17 பேர் அடங்கிய குழுவினர் சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில் சாத்தான்குளத்தில் விசாரணை நடத்தி, முக்கியத் தடயங்களைச் சேகரித்தனர்.
தொடர் விசாரணை நடத்திவரும் சிபிஐ அலுவலர்கள், இன்று (செப்.23) கோவில்பட்டி கிளைச் சிறையில் மாலை 4.30 மணி முதல் விசாரணை மேற்கொண்டனர். தந்தை மகன் இருவரும் தங்கியிருந்த அறைகளில் தடயவியல் வல்லுநர்கள் சோதனை நடத்தினர். சுமார் 6.20 மணிக்கு குழுவினர் விசாரணையை முடித்துக் கொண்டு மதுரை சென்றனர்.
இதையும் படிங்க: குழந்தைகளின் உடல் பருமனை சமாளிப்பது எப்படி...!