லக்னோ: கடந்த 10 ஆண்டுகளாக குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, அது தொடர்பான பாலியல் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை சர்வதேச அளவில் விற்பனை செய்த உத்தரப் பிரதேச மாநிலம் நீர்ப்பாசன துறையின் இளநிலை பொறியாளரை சிபிஐ அலுவலர்கள் கைது செய்தனர்.
இவர் சித்ரகூட், பண்டா மற்றும் ஹமீர்பூர் மாவட்டங்களில் 5 முதல் 16 வயதுக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இளநிலை பொறியாளருக்கு நீதிபதி ஒருநாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். தொடர்ந்து சிபிஐ அலுவலர்கள் சம்மந்தப்பட்ட இளநிலை பொறியாளர் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.
இது குறித்து சிபிஐ தரப்பில் கூறுகையில், “சிறுவர், சிறுமிகளின் உடல் ரீதியான துன்புறுத்தல் காட்சிகள் செல்போன், கேமரா உள்ளிட்ட மின்சாதனங்கள் வழியாக படம் பிடிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்.
சம்மந்தப்பட்ட இளநிலை பொறியாளரை பொறி வைத்து பிடித்துள்ளோம். அவர் சட்டவிரோத செயல்களில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கலாம்.
அவரின் வீட்டில் சோதனை நடத்திய போது, அவரின் இருண்ட பக்கங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. அவரின் மின்னஞ்சலும் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவரின் வீட்டில் ரூ.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது” என்றார்.
இதையும் படிங்க: 'உ.பி.யில் ஆறு வயது சிறுமி கொடூரக் கொலை'- தம்பதி உள்பட நால்வர் கைது