கடந்த 2012 ஆம் ஆண்டு, சட்ட விரோத தங்கம் ஏற்றுமதி, இறக்குமதி குற்றச்சாட்டில், சுரானா கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திலிருந்து 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வங்கிக்கடன் தொடர்பாக சிபிஐ சீல் வைத்திருந்த 400 கிலோ தங்கத்தை, வங்கி அதிகாரிகள் எடை போட்ட போது, 103 கிலோ தங்கம் எடை குறைந்து இருந்தது. இது தொடர்பாக வங்கி தரப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். சுரானா கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் சிபிஐ சீல் வைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மாயமானது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் கோரியிருந்தார்.
நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பான சிபிஐ மீது புகார் கூறப்பட்ட இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது தொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து 6 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தெரிவித்திருந்தது. அதன்படி இதனை திருட்டு வழக்காக பதிவு செய்து, வழக்கின் விசாரணை அதிகாரியாக, சிபிசிஐடி வடக்கு மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக இன்று சிபிசிஐடி முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது. இதில் புகார்தாரரான வங்கி அதிகாரி ராமசுப்பிரமணியன் நேரில் ஆஜராகி, தங்கத்தை எடை போடும் போது எடுக்கப்பட்ட 20 நிமிட வீடியோவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க உள்ளார்.
இதுமட்டுமில்லாமல், சுரானா நிறுவனத்தில் தங்கம் வைக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், அப்போதைய சிபிஐ அதிகாரிக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி துபாய் செல்ல முயன்றவர் கைது