குரூப் 4 தேர்வு முறைகேட்டில் முறைகேடு செய்து வெற்றி பெற்றவர்கள் அனைவரும் மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே அளித்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடி காவல் துறையினர் மேஜிக் பேனாவை தயாரித்துக் கொடுத்ததாக சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த அசோக் என்பவரைக் கைது செய்துள்ளனர். குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை ஐந்து அரசு ஊழியர்கள், முறைகேடாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற 10 பேர், ஜெயக்குமார் உட்பட மூன்று இடைத்தரகர்கள், ஐந்து தனியார் வாகன ஓட்டுநர்கள் என மொத்தம் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், குரூப் 2ஏ தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகராக செயல்பட்டதாக பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இடைத்தரகர் ஜெயக்குமார் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் மூன்று காவலர்கள் மற்றும் முறைகேடாகத் தேர்வு எழுதி வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள் 18 பேர் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முறைகேட்டில் ஏற்கனவே மூன்று கிராம நிர்வாக அலுவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், இன்று விழுப்புரம் மாவட்டம் அணிலடியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அமல்ராஜ் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்குகள் தொடர்பாக மூன்று நபர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதால் தற்போது வரை 50 பேர் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு - 'மேஜிக்' பேனா தயாரித்துக் கொடுத்தவர் அதிரடி கைது