கொளத்தூர் ஆண்டர்சன் சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் இம்மாதம் 14 முதல் 30ஆம் தேதிவரை அதிமுக சார்பில் 3 வேளையும் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியைச் சேரந்த அதிமுக பிரமுகரும், பெரம்பூர் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி கழக இயக்குநருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொத்த உணவு டோக்கன்களையும் பெற்று கொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் அம்மா உணவக வாசலில் பொதுமக்களை ஒன்றுகூட்டி பேனர் வைத்து, சமூக இடைவெளி இல்லாமல் உணவு டோக்கன்களை வழங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மண்டல அலுவலக அலுவலர் நாராயணன், 144 தடை உத்தரவு உள்ளதால் டோக்கன் முறையில் உணவு வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி, நாராயணனுடன் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளபோது அதிமுக பிரமுகர் கரோனா தொற்று பரவும் விதமாக செயல்பட்டதாக மண்டல அதிகாரி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: டிக்டாக் பார்த்து சாராயம் காய்ச்சிய இருவர் - காவல்துறை வழக்குப்பதிவு!