நாகர்கோவிலிலிருந்து ஆசாரிப்பள்ளம் செல்லும் சாலையில் நேற்று (டிச. 02) மாலை அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கால்வாய் அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்களை இடித்துத் தள்ளியது.
இதில் சேதமடைந்த மூன்று வாகனங்களும் அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்து விழுந்தன. அப்போது அந்தக் காரிலிருந்து இறங்கிய பறக்கைப் பகுதியைச் சேர்ந்த ராஜா, போதையில் இருந்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் உரிமையாளர்கள் அவரைப் பிடித்து பைக்கிற்கு இழப்பீடு கேட்டுள்ளனர்.
அப்போது காரின் ஓட்டுநர் மூன்று பேருக்குமே புது இருசக்கர வாகனம் வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். இச்சூழலில் இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டு, அந்தப் பகுதிக்கு காவல் துறையினர் வந்துள்ளனர்.
அந்த வேளையில், ராஜா அந்த இடத்தைவிட்டு நழுவியுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அப்பகுதியிலுள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புப் படக்கருவியின் காட்சிகளைப் பெற்று, வழக்குப்பதிவு செய்து வாகன விபத்தை ஏற்படுத்திய நபரைத் தேடிவருகின்றனர்.
அதே நேரத்தில் சேதமடைந்த மூன்று இருசக்கர வாகனத்தின் உரிமையாளர்களும், புது வாகனம் வாங்கித் தருவதாக கார் ஓட்டுநர் உத்தரவாதம் அளித்ததால் காவல் துறையினரிடம் புகார் கொடுக்க மறுத்துவிட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சிசிடிவி பதிவுகளைக் கொண்டு காவல் துறையினர் தாமாக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தனர்.