சென்னை சேலையூர் மாடம்பாக்கம் பகுதியில் காவல்துறையினர் நேற்று (ஜூலை 23) வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புல்லட் வாகனத்தில் வந்த இருவர் சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவரும் பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நூருல்லா (24), சையத் ரியாஸ் (40) என்பது தெரியவந்தது. இவர்கள் கடந்தாண்டு மேற்கு தாம்பரத்தில் விலை உயர்ந்த புல்லட்டை திருடியதை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியபோது கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு தாம்பரம் காசநோய் மருத்துவமனை அருகில் இன்னொரு புல்லட் வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

இருவரும் தொடர்ந்து புல்லட் வாகனங்களை மட்டுமே திருடி ஆசைதீர ஓட்டி விட்டு, அதன்பிறகு குறைந்த விலைக்கு விற்பனை செய்பவர்கள் என்றும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த 2 புல்லட்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநர் தப்பியோட்டம்