சென்னை: எண்ணூர் சுனாமி குடியிருப்பு 19ஆவது பிளாக்கைச் சேர்ந்தவர் விஜயகுமார்; கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி (29). சுப்புலட்சுமிக்கு பிரதாப் என்ற தம்பி இருக்கிறார். நேற்றிரவு, திருவொற்றியூர் குப்பத்தில் தனது வீட்டிலிருந்து, எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசிக்கும் அக்கா சுப்புலட்சுமியைப் பார்க்க பிரதாப் சென்றுள்ளார்.
சுப்புலட்சுமியின் வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. பிரதாப் கதவை தட்டியுள்ளார். கதவு தட்டப்பட்டு சிறிது நேரம் கழித்துவந்து கதவைத் திறந்த சுப்புலட்சுமி பதற்றமாக காணப்பட்டுள்ளார். அப்போது ஏன் பதற்றமாக இருக்கிறாய் என பிரதாப் தனது அக்காவிடம் கேட்டதற்கு சுப்புலட்சுமி மழுப்பலாகவே பதிலளித்துள்ளார்.
இதனால் சந்தேகம் அடைந்த சுற்றும்முற்றும் தேடிப்பார்த்தபோது வீட்டின் கட்டிலுக்கு அடியில், அதே பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்பவர் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அதைப்பார்த்து ஆத்திரம் அடைந்த பிரதாப், ஜானகிராமனை வெளியே இழுத்துத் தாக்கியுள்ளார். அவரிடமிருந்து ஜானகிராமன் தப்பித்து ஓடியுள்ளார்.
இருந்தும் ஆத்திரம் அடங்காத பிரதாப் தன் அக்காவை சரமாரியாகத் தாக்கி, அருகிலிருந்த தலையணையால் சுப்புலட்சுமியின் முகத்தை அழுத்தி அவரைக் கொலைசெய்துள்ளார். பின்னர், எண்ணூர் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய எண்ணூர் காவல் துறையினர், சுப்புலட்சுமியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், சுப்புலட்சுமிக்கு ஜானகிராமனுடன் பல நாள்களாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்தது தெரியவந்துள்ளது.
விஜயகுமார் வீட்டில் இல்லாத நேரத்தில், சுப்புலட்சுமியின் வீட்டிற்கு ஜானகிராமன் அடிக்கடி வருவது, அக்கம்பக்கத்தினர் மூலமாக கணவர் விஜயகுமாருக்கும், சகோதரர் பிரதாப்புக்கும் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் சுப்புலட்சுமியை எச்சரித்துள்ளனர். இருந்தும் கணவன், தம்பிக்குத் தெரியாமல், சுப்புலட்சுமி ஜானகிராமன் உறவு தொடர்ந்து வந்துள்ளது. இதையடுத்தே, இந்த கொலை சம்பவம் நடந்தேறியுள்ளது.
இதைுயும் படிங்க: மூதாட்டி வெட்டிப் படுகொலை