சேலையூர் அருகே உள்ள திருவஞ்சேரி செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத் கண்ணன் (33). இவருக்கு திவ்யா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான வினோத் கண்ணன், மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் எனக் கூறப்படுகிறது.
வினோத் கண்ணன் மனைவியுடன் பிரச்னை செய்யும் போதெல்லாம், அவரை சிக்க வைக்கும் நோக்குடன் முதலமைச்சர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். இதுபோல் ஏற்கனவே இருமுறை மிரட்டல் விடுத்து கைதும் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, கடந்த 9ஆம் தேதியும், சோறு போடாத மனைவி மீது கோபம் கொண்டு முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சேலையூர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையிலிருந்து நேற்று முன்தினம் வெளி வந்த வினோத் கண்ணன், நேற்றிரவு மனைவியுடன் மீண்டும் தகராறு செய்துள்ளார். அப்போது, ஆத்திரத்தில் அவர் தன் மீது டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அவசர ஊர்தியில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வினோத் கண்ணன் 40 விழுக்காடு தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிகழ்வு தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: இறந்தவரின் உடலை தர மறுத்த மருத்துவமனை: 'ரமணா' பட பாணியில் நடந்த சோகம்!