ஹவுரா (மேற்கு வங்கம்): திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் சுடப்பட்ட பாஜக கட்சி உறுப்பினர் கிங்கர் மஜி, கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இது அரசியல் வன்முறை என்று கூறி பாஜக, திரிணாமுல் கட்சியைச் சேர்ந்தவரின் வீட்டை பதிலுக்கு அடித்து நொறுக்கியதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் காவல் துறையும் மாநிலத்தில் ஆளும் கட்சியும் இந்தச் சம்பவம் இரு அண்டை வீட்டாருக்கு இடையிலான நிலப் பிரச்னையின் காரணமாக ஏற்பட்ட மோதல் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
பக்னான் காவல் நிலைய பகுதியிலுள்ள சந்தனாபராவில், 52 வயதான மலர் வர்த்தகரான பாஜக கட்சியைச் சேர்ந்த கிங்கர் மஜி சனிக்கிழமை அன்று (அக். 24) வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவத்தில் திரிணாமுல் கட்சியின் பரிதோஷ் மஜியுடன், கூட்டாளிகள் சிலர் சேர்ந்து, கிங்கர் மஜியை தடுத்து நிறுத்தி, பழைய நில தகராறு தொடர்பாக சுட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி குண்டுகளின் சத்தத்தைக் கேட்ட உள்ளூர் மக்கள் கிங்கர் மஜியைக் காப்பாற்ற விரைந்தபோது, குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர் உலுபீரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து அவர் கொல்கத்தாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று இறந்துள்ளார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பாக்னன் சட்டப்பேரவை உறுப்பினர் அருணாவா சென் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். இந்தச் சம்பவம் ஒரு பழைய போட்டியின் தொடர்ச்சி என்றும், இதில் எந்த அரசியல் தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், “குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடிக்குமாறு நாங்கள் காவல் துறையிடம் கோரியுள்ளோம்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.