கடலூர் மாவட்ட பாஜக வர்த்தக அணி செயலாளராக இருப்பவர் முருகன். இவர், தனது நண்பர்களான சண்முகம், விமல்ராஜ் ஆகிய மூவருடம் புதுச்சேரியில் மது அருந்திவிட்டு காரில் கடலூர் திரும்பும்போது ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் காவல் துறையினர் நிறுத்தி உள்ளனர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
சோதனைச் சாவடி காவல்துறையினர் கொடுத்த தகவலை அடுத்து போக்குவரத்து காவலர் ஒருவர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் காரை மறித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகன், பாஜகவில் மாவட்ட பொறுப்பில் உள்ள தன்னை எப்படி காவல்துறை தடுத்து நிறுத்தி காரில் பரிசோதனை மேற்கொள்ளலாம் என கேட்டு போக்குவரத்து காவலரை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்க முயன்றார்.
இது குறித்து புது நகர் காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட பாஜக வர்த்தக அணி செயலாளர் முருகன் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பொதுமக்களை தாக்குவது, கடைகளை சூறையாடுவது, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது என்ற வரிசையில் தற்போது பாஜகவினர் நாளுக்கு நாள் அராஜகத்தில் ஈடுபடுவதுடன் பணியில் இருந்த காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, தாக்க முயற்சித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.