பெங்களூரு: டி.ஜே., ஹள்ளி, கே.ஜி., ஹள்ளி வன்முறை மற்றும் வகுப்பு கலவர வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவரும், நகரத்தின் முன்னாள் மேயருமான சம்பத் ராஜ், சிசிபி காவலர்களால் நவ.16ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
முன்னதாக சம்பத் ராஜ், பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்தார். இதற்கிடையில் அவர் காவலர்களுக்கு எவ்வித தகவலும் அளிக்காமல் அக்டோபர் 31ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து மாயமானார்.
இந்த நிலையில், அவரை நவ.16ஆம் தேதி காவலர்கள் கைது செய்துள்ளனர். பெங்களூரு வன்முறை வழக்கில் சம்பத் ராஜ் பெயரும் குற்ற பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும், மற்றொரு காங்கிரஸ் பிரமுகரான ஏஆர் ஜாகீர் பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 11ஆம் தேதி பெங்களூரு நகரில் வன்முறை வெடித்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தியின் உறவினர் ஒருவர் சமூக வலைதளத்தில் தெரிவித்த இழிவான கருத்தால், நகரத்தில் மூன்று நாள்கள் வன்முறை பதற்றம் நிலவியது.
இந்த வன்முறையில் 415 பேர் ஈடுபட்டதாக காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ. அகண்ட ஸ்ரீநிவாஸ் மூர்த்தி மீதும் காவலர்கள் எப்.ஐ.ஆர். பதிந்துள்ளனர். இந்நிலையில், சம்பத் ராஜ் கைது குறித்து அவரது வழக்குரைஞர் கூறுகையில், “அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புனையப்பட்ட வழக்கில் சம்பத் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் பெயர் குற்ற பத்திரிகையில் எந்த ஆதாரமும் இன்றி சேர்க்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: பெங்களூரு கலவரம் : நவீன் தலைக்கு ரூ.51 லட்சம் சன்மானம் அறிவித்தவர் மீது வழக்கு!