கர்நாடகாவில் பிரபல மருத்துவமனையின் பெயரில் விளம்பரம் ஒன்று இணையத்தில் வெளியானது. அந்த விளம்பரத்தில் சிறுநீரக (கிட்னி) கொடையாளர்கள் தேவை என்று கூறப்பட்டிருந்தது. சிறுநீரக கொடையாளர்களுக்குத் தேவைக்கு அதிகமாக பணம் கொடுப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தது. இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் இது குறித்து ரகசிய விசாரணையில் இறங்கினர். விசாரணையின் நிறைவில் காவலர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த நவீன திருட்டுக்குப் பின்னால் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கும்பல் ஒன்று இருந்தது தெரிய வந்தது. அந்தக் கும்பலில் யாரும் டாக்டர் கிடையாது. அவர்களிடம் மருத்துவமனையோ, அறுவை சிகிச்சை வசதியோ செய்யும் அளவுக்கு கருவிகள் கிடையாது. வெறுமனே இணையதளத்தில் விளம்பரம் அளித்து இந்தத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடம் 200க்கும் மேற்பட்ட மக்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
இதையடுத்து அந்த நைஜீரிய கும்பலைக் காவலர்கள் கைது செய்தனர். அவர்கள் ஈசன் லவ்லி, முஹம்மது அஹமது இஸ்மாயில், சூடான் நாட்டைச் சேர்ந்த மர்வன், ஹிரேந்திரா, கெமி ரஞ்சன் மற்றும் திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஜாடின் குமார் ஆகியோர் ஆவார்கள்.
கைது செய்யப்பட்ட இந்த ஆறு நபர்களிடமும் காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடமிருந்து வங்கிப் புத்தகம், சிம் கார்டு, ஏடிஎம் கார்டு, காசோலை புத்தகம், செல்போன் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க: பிரதமர் மோடி தொகுதியில் பிரியங்கா காந்தி... காங்கிரஸின் அடுத்த மூவ் என்ன?