சென்னையில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கிலோ கணக்கில் கஞ்சா கடத்தி வரப்பட்டு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. நூதன முறையில் கடத்திவரப்படும் கஞ்சாவை, காவல்துறையினர் தொடர்ந்து பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும், சென்னையில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள அன்னை சத்யா நகரில், கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது தொடர்பாக ஆயுதப்படை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டிக் கேட்ட பெண்ணுரிமை இயக்கத்தைச் சேர்ந்த அன்னக்கிளி என்பவர், ஆயுதத்தால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது சகோதரிகள் யசோதா, கற்பகம் ஆகியோரையும் கஞ்சா விற்பனை கும்பல் தாக்க முயன்றது. மேலும், நவம்பர் 14ஆம் தேதி இரவு கஞ்சா போதையில் சுந்தர், சங்கர், தேவா ஆகிய மூவர் தகராறில் ஈடுபட்டதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டை காவல் நிலையத்தில் அன்னக்கிளி புகார் அளித்தார்.
இதையடுத்து, சென்னையில் கஞ்சா விற்பனையை தடுப்பதற்காக காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டு கஞ்சா விற்பனையாளர்களை கைது செய்து வருகிறார். இருப்பினும், அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா விற்பனையையும் கஞ்சா பழக்கத்தையும் தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதனிடையே, அன்னக்கிளியை தாக்கிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.