சென்னை: தண்டையார்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புகைப்படக் கலைஞர் ஒருவர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டார்.
கடந்த 23ஆம் தேதி சென்னை தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் பாலியல் தொழில் நடப்பதாக கணவன் மனைவி உள்பட 10 பேரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் எண்ணூர் காவல் ஆய்வாளரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மீட்கப்பட்ட 15 வயது சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இரண்டு மாதங்களில் 400-க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இதில், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பாஜக பிரமுகர்கள், பத்திரிகையாளர் எனப் பட்டியல் நீண்டது.
இதில், பாஜக பிரமுகர், காவல் ஆய்வாளர், பத்திரிக்கையாளரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களின் பட்டியலை வைத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மேலும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ஆவடி பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிரிதரன் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக செல்போன் எண்களைப் பரிசோதித்ததில் தெரியவந்தது. இதனையடுத்து, ஆவடி சென்ற தனிப்படை காவல் துறை அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்து புழல் சிறையில் அடைத்தனர்.
தண்டையார்பேட்டை 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்படும் பிரமுகர்களின் பெயர் பட்டியல் நீண்டு கொண்டே சென்றாலும், அனிதா என்ற பெண்மணியிடம் தனிப்படை காவல் துறை விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 2391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி