சென்னை அடுத்த திருநின்றவூரில் பல்வேறு வகையில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் வந்துகொண்டே இருந்திருந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்த காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் ரகசியக் குழுக்கள் உருவாக்கப்பட்டு தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், திருநின்றவூர் அருந்ததிபாளையம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கிவைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் தனிப்படை காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திடீர் சோதனையில் இறங்கினர். சோதனையின்போது, அந்த கிராமத்தில் உள்ள மேட்டு தெருவில் உள்ள ஒரு வீட்டின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனையடுத்து, அதிரடியாக அந்த வீட்டினுள்ளே நுழைந்து சோதனை செய்தனர். அப்போது, அங்கு கொட்டப்பட்டிருந்த மணலுக்குள் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அங்கிருந்த கண்ணையா (61) என்ற முதியவரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், கஞ்சா போதைப் பொருள்கள் சுமார் 15 கிலோ எடை கொண்டது என்றும் ரூ.10 லட்சம் மதிப்பிலானது என்றும் தெரியவந்தது.
மேலும், இந்த கஞ்சா போதைப் பொருள்களை திருநின்றவூரை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி நாதனின் மருமகள் ஜெயந்தி (28) என்பவர் பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்டு வந்த இந்த கஞ்சாவை திருநின்றவூர், பட்டாபிராம், ஆவடி உள்ளிட்ட இடங்களுக்கு பொட்டலங்களாக அவர் சப்ளை செய்து வருவதும் தெரியவந்தது.
காவல்துறையினரின் இந்தச் சோதனை குறித்து தகவலறிந்த ஜெயந்தி தலைமறைவாகிவிட்டார். இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் இந்த குற்றத்தில் ஈடுபட்டுவந்த ஜெயந்தியை கைது செய்ய தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 15 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.