நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் இருதரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் அம்பேத்கர் சிலை நேற்று உடைக்கப்பட்டது. அதனைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளுக்கும் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.
- அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- திருத்தணியில் விடுதலை சிறுத்தைகள் மற்றும் தலித் மக்கள் முன்னணி அமைப்பைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நகராட்சியின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- அண்ணல் அம்பேத்கர் சிலையைச் சேதப்படுத்தியவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- கரூர் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
- ஈரோடு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், சிலையைச் சேதப்படுத்திய நபர்களைத் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
- மயிலாடுதுறை அருகே எலந்தங்குடியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சத்தியமங்கலத்தில் தலித் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டதைக் கண்டித்து திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பெரியார் சிலை அருகே கண்டன போராட்டம் நடத்தினர்.