திருப்பத்தூர்: குழந்தையை கலைக்க கணவன் கொடுத்த நஞ்சால் மனைவியும், வயிற்றிலிருந்த குழந்தையும் இறந்த சம்பவம் பெரு சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி அம்பேத்கர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான, சிவா - ஜோதி தம்பதியின் மகள் சத்தியவதனம் (25). இவரை ஆண்டியப்பனூர் பகுதியில் வசித்துவரும் சுப்பிரமணியின் மகன் மணிவண்ணனுக்கு இரண்டு ஆண்டுகள் முன்பு திருமணம் முடித்து வைத்தனர். மணிவண்ணன் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
பஞ்சாபில் ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் மணிவண்ணன் தன் மனைவி சத்தியவதனாவையும் உடன் அழைத்துச் சென்று வாழ்க்கை நடத்தி வந்தார். இச்சூழலில் சந்திரவதனா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென யாருக்கும் தெரியாமல் தன் சொந்த ஊரான ஆண்டியப்பனூருக்கு மனைவியை அழைத்து வந்த மணிவண்ணன், தன் தாய், சகோதரியுடன் சேர்ந்து குழந்தையை கலைக்க நஞ்சு கொடுத்துள்ளனர்.
மூவரை கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற நபர்! கடன் தொல்லையால் கொடூர முடிவு!
இதில் குழந்தை இறந்த நிலையில், தாய் சத்தியவதனம் உடல்நிலை மோசமடைந்துள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சையின்போது, தாயும் இறந்ததால் கணவன் மணிவண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல், இறந்த மனைவியை மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிய காவல் துறையினர், தப்பியோடிய ராணுவ வீரரான மணிவண்ணனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்ணின் உறவினர்கள் இது திட்டமிட்ட கொலை என்றும், கொலைக்கு காரணமான மணிவண்ணன், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவருடைய அக்கா, தாயார் உள்பட அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.