வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் அருகே கிடங்கு ராமபுரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் குப்புசாமி - உஷா. இவர்களது மகள் பவித்ரா(14) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் பவித்ரா கடந்த சில நாள்களாக அதே பகுதியில் உள்ள தனது பாட்டி லட்சுமி அம்மாள் வீட்டில் தங்கி வந்துள்ளார். நேற்று இரவு முழுவதும் பேர்ணாம்பட் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், லட்சுமி அம்மாள் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது.
இந்த சுவர் இடிந்த விபத்தில் பாட்டி லட்சுமி அம்மாள் மற்றும் பேத்தி பவித்ரா இடிபாடுகளில் சிக்கிய நிலையில், பவித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக லட்சுமி அம்மாளை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேல்பட்டி காவல் துறையினர், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.