ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை - ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் கமுதக்குடி என்ற இடத்தில் கார் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. நான்கு வழிச்சாலையில் நெடுஞ்சாலை காவல்துறையினர் ரோந்து சென்றபோது பழுதான காரின் அருகே சென்றுள்ளனர்.
அப்போது காவல்துறையினருக்கு பயந்து, காரில் இருந்த இருவர் தப்பியோட முயன்றுள்ளனர். காவல்துறையினர் அவர்களை விரட்டியதில், ஒருவரை மட்டும் பிடித்த நிலையில் மற்றொருவர் தப்பித்து ஓடிவிட்டார். பிடிபட்டவர் காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பெரியகருப்பன் (25) என்பது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம் ஒத்தகடையில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்துவதற்கு காரில் கொண்டு வந்தோம். கார் ரேடியேட்டர் பழுதாகிவிட்டது. பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது காவல்துறை வாகனம் வந்ததை கண்டு தப்பிக்க ஓடினோம் என பிடிபட்ட பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
நான்கு மூட்டைகளில் இருந்த கஞ்சா சுமார் 88 கிலோ இருக்கும் என காவல் துறையினர் கூறினர். காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், பரமக்குடி டிஎஸ்பி அலுவலகத்தில் பிடிப்பட்ட பெரியகருப்பனிடம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் கார்த்திக், பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் ஆகியோர் விசாரணை செய்து வருகின்றனர். தப்பியோடிய மற்றொரு நபர் தேடப்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: செல்பி எடுத்த சுற்றுலாப்பயணிகளை விரட்டிய காட்டெருமை!