மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மகாதானபுரத்தைச் சேர்ந்தவர் விஜயா. இவர் இறந்த தனது கணவருக்கு பூம்புகாரில் திதி கொடுத்துவிட்டு குடும்பத்தினருடன் ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிச் சென்றுள்ளனர்.
அப்போது செம்பனார்கோவில் அருகே கருவிழந்தநாதபுரம் பிரதான சாலையில் வேகமாக வந்த கார், இந்த இரு வாகனத்தின் மீதும் மோதியுள்ளது. இதில் ஆட்டோவில் பயணம்செய்த விஜயா, வைரம், புவனேஸ்வரி, சிறுமி பர்வின் (3), இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உள்ளிட்ட 7 பேர் படுகாயமடைந்தனர்.
உடனடியாக 108 அவசர ஊர்திக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, படுகாயமடைந்த அனைவரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காஞ்சிபுரத்திலிருந்து சொந்த ஊரான வேதாரண்யத்திற்கு குடும்பத்தினருடன் பாண்டியன் என்பவர் காரில் சென்றபோது, கார் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.