காஞ்சிபுரம் அருகே குருவிமலை வசந்தம் நகர் பகுதியில் காஞ்சிபுரம் தாலுக்கா காவல் ஆய்வாளர் ராஜகோபால் மற்றும் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வேகமாக வந்த ஒரு மினி வேனை காவல்துறையினர் சைகை காட்டி நிறுத்தினர்.
வேன் ஓட்டுநரை விசாரித்தபோது, உரிய ஆவணங்கள் ஏதுமில்லாமல், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் மினி வேனை சோதனை செய்தனர். அதில், மூன்று கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, வேன் ஓட்டுநர் காஞ்சிபுரம் செவிலிமேட்டை சேர்ந்த சகாதேவன் (21), லோகேஷ் (16), வெண்பாக்கத்தை சேர்ந்த முகமது அன்சாரி (21), அப்துல்லா புரத்தைச் சேர்ந்த முகம்மது அனஸ் (16), புஞ்சையரசன் தாங்கலை சஞ்சய் (16), கோளிவாக்கத்தை சேர்ந்த திருவேங்கடம் (17) ,ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தொடர்ந்து 3 கிலோ கஞ்சா பொட்டலங்கள், டிஜிட்டல் தராசு, 5 செல்போன்கள், ஆயிரத்து 60 ரூபாய், கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரையும் காவல்துறையினர் காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள்கள் சிறைக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நான்கு சிறுவர்கள் செங்கல்பட்டில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், 2 பேர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு