திருநெல்வேலி மாவட்டம், கடையம் அடுத்த கல்யாணிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சண்முகவேலு -செந்தாமரை தம்பதி. இந்நிலையில் நேற்று இரவு சண்முகவேலு வீட்டின் வாசலில் அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து ஆயுதங்களுடன் வந்த கொள்ளையர்கள் இருவர் அவர்களது வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பின்பு பின்புறமாக வந்த ஒரு கொள்ளையர் முதியவர் சண்முகவேலுவின் கழுத்தை துணியால் நெரித்துள்ளார்.
![கொள்ளையர்களுடன் போராடும் தம்பதி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4114227_thirunelveli-2-2.bmp)
இதில் நிலைதடுமாறிய அவர் நாற்காலியுடன் கீழே விழுந்துள்ளார். பின்னர் சுதாரித்துக் கொண்டு திரைப்படத்தில் வரும் ஹூரோக்கள் போன்று மீண்டு எழுந்து கொள்ளையர்களை தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு உள்ளே இருந்து வந்த செந்தாமரை, கொள்ளையர்களுடன் கணவர் போராடுவதை கண்டு, அவரும் கையில் கிடைத்த நாற்காலி உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்களை தாக்கினார்.
அப்போது கொள்ளையர்களில் ஒருவர் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த நான்கு பவுன் தங்க நகையை பறித்துள்ளார். கொள்ளையடிக்க வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியது மட்டுமன்றி, அவர்களை மடக்கி பிடிக்கவும் முதியவர்கள் போராடினர். இதையடுத்து ஒருவழியாக தப்பித்தோம், பிழைத்தோம் என கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். முதியவர்களின் இந்த போராட்டக்காட்சி அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
பின்னர் இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், வீட்டிற்கு வந்த கடையம் காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர். அரிவாளை வைத்து மிரட்டிய கொள்ளையர்களை துணிச்சலுடன் எதிர்கொண்டு போராடிய வயதான தம்பதியினருக்கு காவல் துறையினர் உள்ளிட்ட பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.